• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் பூங்காவில் விளையாடிய சிறுவன் இறப்பிற்கு யார் காரணம்? அலட்சியத்தால் நடத்த விபரீதம்!

  • Share on

விளாத்திகுளம் முத்துப்பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் 13 வயது மகன் மனோஜ் குமார். இவர் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி மனோஜ் குமார் நண்பர்களுடன் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அமைந்துள்ள "முத்துப்பூங்காவிற்கு" விளையாடச் சென்றுள்ளார். 

அப்போது பூங்காவில் இருந்த மின்விளக்கு கம்பத்தை சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தபோது மனோஜ் குமார் மின்விளக்கு கம்பத்தை தொட்டதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் மனோஜ் குமார் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல்துறையினர் உடனடியாக பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த மற்ற சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை பத்திரமாக பூங்காவில் இருந்து வெளியேறச் செய்து விளாத்திகுளம் மின்வாரிய பணியாளர்களை வரவழைத்து அந்த மின்விளக்கு கம்பத்தை சோதனையிட்டதில் கம்பத்தின் மீது உயர் அழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளாத்திகுளம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த "முத்து பூங்காவில்" முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததும், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமும் தான் 13 வயது சிறுவன் மனோஜ் குமாரின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

உலகத்தில் விலைமதிப்பற்றதாக சொல்லப்படுவது மனித உயிர். பல கனவுகளை தாங்கி, எதிர்காலத்தை நோக்கி வாழ்ந்த சிறுவனின் இறப்பை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் வீட்டு அருகில் உள்ள பூங்காவில் இந்த சம்பவம் நடந்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இறந்த சிறுவனின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டதோடு தனது கடமை முடிந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஒரு புறம் நகர்ந்து விட்டு செல்வதும் 

ஆளும் திமுக வின் தலைமையின் கீழ் உள்ள பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே சிறுவனின் இறப்பிற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் முன்வைத்து மறுபுறம் நகர்ந்து விட்டு செல்வதுமே நடைபெறக்கூடிய சூழலில், சிறுவனின் இறப்பிற்கான நீதியும், நடவடிக்கையும் இறுதியில் கேள்வி குறியாக இருந்து விடுவது தான் இந்த சமூகத்தில் வழக்கமாக உள்ளது.

அதிகளவில் சிறுவர்கள் வந்து செல்லும் இந்த பூங்காவை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் மீதும் ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அது எப்பொழுது? என்பதும் கேள்வி குறியில் தான் உள்ளது.

  • Share on

தூத்துக்குடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்பு... ஊரையே மாற்ற போகுதாம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் 40 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!

  • Share on