தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2024 புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி நாளை (31.12.2023) இரவு மற்றும் 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான திங்கள்கிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது,
1) தூத்துக்குடியில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை.
2) நாளை 31.12.2023 அன்று இரவு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது.
3) புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
4) புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகளையும் பறிமுதல் செய்யப்படும், மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் ‘வீலிங்” செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மதுஅருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
5) புத்தாண்டு தினத்தன்று வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டின் தகவல்களை அருகிலுள்ள காவல் நிலையங்களில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அவசர உதவி தேவைப்படுவர்கள் 100, தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்கள் மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டினை கொண்டாடவும், பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.