தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், முன்னிலை வகித்தார். மோட்டார் சைக்கிள் பேரணியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டனர். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி, 3ம் மைல், விவிடி சிக்னல் வழியாக குருஸ் பர்னாந்து சிலை அருகில் முடிவுற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மத்திய அரசினால் சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஒரு வார காலம் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா ஒரு மாத காலம் நடத்தப்படுகிறது.
சாலை பாதுகாப்பு விழா, சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற மையக்கருத்தில் அடிப்படையில் 18.01.2021 முதல் 17.02.2021 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழாவினையொட்டி போக்குவரத்துறை, காவல் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், கார் ஏஜென்டுகள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவினை துவக்கி வைக்கும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று துவக்கி வைக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விழாவையொட்டி ஹெல்மெட் அணிதல், சாலை விதிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு மாதம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
போக்குவரத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 19.01.2021 அன்று நெடுஞ்சாலைகளில் செல்பவர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் 20.01.2021 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
மகளிர்கள் பங்கேற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி 21.01.2021 அன்று நடைபெறுகிறது. குடியரசு தினமான 26.01.2021 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும், 29.01.2021 அன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்கள் நடைபெறுகிறது.
பெண்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கள் 11.02.2021 அன்று நடைபெறுகிறது. போக்குவரத்து வாகனங்கள் மற்றும் டிராக்டர்களுக்கு 15.02.2021 அன்று சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ஒளி எதிரொலிப்பு டேப்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாகன ஓட்டுநர்களுக்கு மன அழுத்தத்தினை குறைக்கும் வழிமுறைகள் தொடர்பான நிகழ்ச்சிகள் 16.02.2021 அன்று நடைபெறுகிறது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உள்ளார்கள். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லா நிலையை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விநாயகம் (தூத்துக்குடி), நெடுஞ்செழியன் (கோவில்பட்டி), மோட்டார் ஆய்வாளர்கள் மாசிலாமணி, குமார், ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.