தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
குமரிக் கடலில் நிலை கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவை தென் தமிழ்நாட்டில் பெருமழையை கொட்டித் தீர்த்தது. ஒரு ஆண்டு முழுவதும் பெய்யக் கூடிய 95 செமீ மழை, ஒரே நாளில் காயல்பட்டினத்தில் கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களிலும் வெள்ளம் கரை புரண்டோடியது. அணைகள் நிரம்பின. அருவிகள் ஆக்ரோஷமாகின. தாமிரபரணி நதியில் 1 லட்சம் கன அடி வெள்ள நீர் பாய்ந்தோடியது.
இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல நூறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாக தத்தளிக்கின்றன. வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில பேரிடர் குழுக்களுடன் முப்படைகளும் களத்தில் இறங்கி தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை விட்டும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்னமும் ( டிச.,21 ) வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசாக சாரல் வந்து செல்கிறது.
இன்று ( டிச.,21 ) வானம் மேகமூட்டத்துடன் லேசாக தூரலுடன் மழை பெய்ய தொடங்கி இருப்பது பொதுமக்களுக்கு அச்ச உணர்வை கொடுக்கிறது.