தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதினால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடியின் பிரதான சாலைகள் தொடங்கி அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழாத இடமே இல்லை என்ற அளவிற்கு, எல்லா வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. மழை பாதிப்பு உதவி எண்கள், முகாம்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், லட்ச கணக்கான மக்கள் வசிக்கக்கூடிய தூத்துக்குடி மாநகரில் ஒரே ஒரு உதவி எண்ணை வைத்து கொண்டு என்ன செய்ய முடியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்படுகிறது.
தூத்துக்குடி மாநகரில் உள்ள மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 10 வார்டிற்கு ஒரு அதிகாரிகள் வீதம் நியமிக்கப்பட்டு, அவர்களது தொடர்பு எண்ணை வெளியிட்டு, மீட்பு பணிகளை முடக்கி விட்டால் மட்டுமே மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க ஒரு வழியாக அமையும். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகளை இதுவரை மாநகராட்சி எடுத்ததாக தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது.
பெரும் பாதிப்புக்குள்ளான மக்களை உடனடியாக அடையாளம் காணப்பட்டு, அவர்களை உடனடியாக மீட்டும் நடவடிக்கைகளில் தூத்துக்குடி மாநகராட்சி ஈடுபட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.