• vilasalnews@gmail.com

நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கவலை இல்லை : மோடி, அமித்ஷா மீது முரளிதரன் குற்றச்சாட்டு!

  • Share on

மோடி, அமித்ஷாவுக்கு மூன்று மாநில தேர்தல் வெற்றி விழா தான் முக்கியம். நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகள் பற்றி கவலை இல்லை என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 13ம் தேதி குளிர்கால கூட்ட தொடர் நாடாளுமன்ற அவையில் நடைபெற்று கொண்டிருக்கின்ற போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இரண்டு நபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் அவையின் மைய பகுதியில் குதித்து, அவர்கள் கொண்டு வந்த கலர் குண்டுகளை வீசி நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். இது 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு நடத்திய அதே நினைவு தினத்தில் இச்சம்பவம் நடைபெற்றது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நாடாளுமன்ற அவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் இருந்தபோது நடந்த இச்சம்பவத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதை தான் இது காட்டுகின்றது. 

இச்சம்பவம் நடைபெற்ற போது பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அவையில் இல்லை. இது புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக  காட்டுகிறது. இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சராக பதவி வகிக்கின்ற அமித்ஷா அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். அதேபோல் மர்ப நபர்கள் பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா மீதும்  உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

புதிய பாராளுமன்றம் பல ஆயிரம் கோடியில்  கட்டுமான பணி தொடங்கிய போது காங்கிரஸ் கட்சி அதை கடுமையாக எதிர்த்தது. பழைய நாடாளுமன்றத்தில் வசதிகள் ஏராளமாக இருந்தும் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்தாலே போதும் புதிய பாராளுமன்றம் தேவையில்லை, இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று காங்கிரஸ் கட்சி அப்போதே எதிர்த்தது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்களுக்கு பெயர் மட்டுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பழைய வரலாற்றுகளை மறைத்து, புதிய வரலாற்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கின்ற மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் புதிய பாராளுமன்றம் கட்டும் பணியில் ஈடுபட்டது.  

தற்போது நடந்திருக்கின்ற இந்த குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியோ, அமிஷாவோ நாடாளுமன்றத்தில் இதுவரை பதிலளிக்கவில்லை. நாடாளுமன்றத்தை பற்றி கவலைப்படாமல் மூன்று மாநில தேர்தலில் பெற்ற வெற்றி விழா தான் எங்களுக்கு முக்கியம் என்று கருதி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக அரசு பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுவரை இந்த தாக்குதல் குறித்து மௌனம் சாதித்து வருவது மிகவும் வெட்கக்கேடான செயல். 

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கனிமொழி, மாணிக்கம் தாகூர், கார்த்திக் சிதம்பரம் ஜோதிமணி உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்திருப்பது மிகுந்த கேலிக்கூத்தாக உள்ளது. நாட்டில் நடப்பது துக்ளக் ஆட்சியோ? அல்லது ஹிட்லர் ஆட்சியா? என்று என்ன தோன்றுகிறது.

கேள்வி எழுப்பியவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே, அனுமதிச்சீட்டு கொடுத்து மர்ம நபர்களை உள்ளே அனுப்பியவர் நாடாளுமன்றத்தில் உள்ளே. இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாக பாஜக செய்து வருகிறது. இதனால் பல கேள்விகள் மக்கள் மத்தியில் உருவாகிறது. ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்ற செயலாக  இருக்குமோ என்று மக்கள் எண்ணுகிறார்கள். எனவே மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவர்கள் அவை நடவடிக்கையில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி சீட்டு வழங்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய பட வேண்டும். இந்த பாதுகாப்பு குளறுபடிகளுக்கு யாரெல்லாம் காரணம் என்பதை பிரதமர் மோடி அவையில் துணிச்சலாக பங்கேற்று உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் யூனியன் வங்கி கிளையை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் : போர்கொடி தூக்கும் வாடிக்கையாளர்கள்!

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(டிச.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on