தூத்துக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள யூனியன் வங்கியின் கிளையை யூனியன் வங்கி நிர்வாகம் மாற்றம் செய்ய இருப்பதாக அறிந்தோம். இந்த முடிவினை மாற்றம் செய்ய வேண்டும் என்று யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் கூறுகையில்:-
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள யூனியன் வங்கி பிரதான கிளை சுமார் 25 ஆண்டுகளாக இந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது. வங்கியின் அருகில் சிவன் கோவில், மசூதி, தேவாலயம் அமையப்பெற்று உள்ளது. தற்போது வங்கியின் கிளை ஒன்றிணைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தக் கிளையை வேறொரு கிளையோடு ஒன்று சேர்க்க யூனியன் வங்கி நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கிளையை வேறொரு கிளையோடு இணைக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு இதே பகுதியில் இந்த கிளையை செயல்பட யூனியன் வங்கி நிர்வாகமானது அனுமதி அளிக்கப்பட வேண்டும் மாறாக கிளை மாற்றும் முயற்சி தொடர்ந்தால் அடுத்தடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.