அதிக மழை பொழிவால், சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடாக, விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வழங்கக்கோரி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, அறுவடை நிலையில் இருந்த அனைத்துப் பயிர்களும் குறிப்பாக, குறிப்பாக மானாவாரி பயிர்கள் அனைத்தும் 100% சேதமடைந்தது. இதனையடுத்து, சேதமடைந்த உளுந்து, பாசி, சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர் செடிகளை கையில் ஏந்தியவாறு, தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் O.A. நாராயணசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை வளாகத்தின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு, விவசாயிகளுடன் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் விவசாய பிரதிநிதிகளாக ஒருசிலரை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்தனர்.
தமிழ் விவசாயிகள் சங்கம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்டத்தில், அதிகமான மழைப்பொழிவால் அனைத்து தாலுகாவிலும், விவசாயிகள் பயிர் செய்த, மக்காச்சோளம், கம்பு, சோளம், உளுந்து, பாசிப்பயறு, வெங்காயம், மிளகாய், மல்லி, பருத்தி, நெல், கடலை, கரும்பு மற்றும் அனைத்து பயிர்களும் மழை வெள்ளத்தில் தண்ணீரில் மிதந்து முளைத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் உற்பத்தி செலவில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. விவசாயிகளின் விளை பொருட்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அதிகமான மழைப்பொழிவு தண்ணீரில் முளைத்தும், அழுகியும் அழிந்தும் விட்டது.
இந்த அதிகமான தொடர் மழை இல்லாமல் இருந்திருந்தால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் மகசூல் கிடைத்து இருக்கும். இதில் உற்பத்தி செலவு 30,000 போக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20,000 உழைப்பின் கூலி கிடைத்து இருக்கும். இந்த மழை வெள்ளத்தால் விவசாயிகளுக்கு பொருளாதாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏக்கர் ஒன்றுக்கு விவசாயிக்கு உற்பத்திச் செலவை 30,000 ரூபாய் கணக்கில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கினால் ஓரளவு விவசாயிகள் பேரிடரில் இருந்து மீள முடியும்.
2020 - 21 ஆம் ஆண்டில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனையும், விவசாயக் குழு கடன்கள் அனைத்தையும் இந்தப் பேரிடர் காலத்தில் தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். மழையால் அழிந்துபோன பயிர்களுக்கு அரசிடம் தான் நிவாரணம் கேட்கிறோம். இந்த கடன் சுமையை விவசாயிகளால் எப்படி கட்ட முடியும்.
குத்தகை எடுத்து விவசாயம் செய்பவர்களுக்கு நிவாரணம் வழங்க
ஒவ்வொரு விவசாயின் நிலத்தை விவசாய கூலித் தொழிலாளர்கள் தான் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள். ஆகையால் சாகுபடி செய்பவர்களுக்கு தான் இந்த வெள்ள நிவாரணம் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் குத்தகை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் மற்றும் இந்த மழை நிவாரணத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கினால் விவசாயிகளின் சுமை குறையும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தது.