தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், இரத்தமும், சதையும் படிந்த கத்தரி மற்றும் கத்தியை சிறுவன் கையால் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் காயங்களை சுத்தம் செய்து கட்டுப்போடும் பயிற்சி மருத்துவர்கள், அந்த நோயாளிகளுக்கு பயன்படுத்திய இரத்தம், சதை படிந்த கத்தரிக்கோல் மற்றும் கத்தியை அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களிடம் கொடுத்து கழுவித் தரச் சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,
காலில் வெட்டுப்பட்டு சிகிச்சைக்காக வந்த ஒரு நடுத்தர வயது ஆணின் காயத்தை சுத்தம் செய்த இரத்தம், சதை படிந்த கத்திரிக்கோல் மற்றம் கத்தியை சுமார் 10 வயது மதிக்கத்தக்க அவரின் மகன் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் மருத்துவர்களோ, செவிலியர்களோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. மாறாக பயிற்சி மருத்துவர்கள், மருத்துக்கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
செவிலியர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் டேட்டா என்டரி வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறனர். நோயாளிகளுக்கு டிரிப்ஸ் ஏற்றும் பணியினைகூட செவிலியர் பள்ளி மாணவிகள்தான் செய்கின்றனர். மருத்துவர்கள் விசிட் என்கிற பெயரில் பார்வையிட்டு செல்கின்றனர் என்றும் மிகவும் மோசமான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றால், மருத்துவ துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் எவ்வித முன் அறிப்பும் இன்றி, சாதாரண பாமர மனிதராக மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டும் சாத்தியம் என்கிறனர் பல்வேறு தரப்பினர்.