கோவில்பட்டி லெட்சுமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் நிலையான நீடித்த “வாழ்வியல் பயிற்சி பட்டறை” முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் கோவில்பட்டி லெட்சுமி மில் மேல்நிலைப் பள்ளியில் ஆரோக்கியமான நிலையான நீடித்த “வாழ்வியல் பயிற்சி பட்டறை “ ஒரு நாள் முகாம் நடந்தது. தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார்.
தொடக்க கல்வி உதவி திட்ட அலுவலர் விநாயகம், இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம்புவனம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி பயிற்சி பட்டறையைதுவக்கி வைத்து பேசினார். மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் பிரபாகுமார் கலந்துகொண்டு தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கலைப்பொருட்களின் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டு பேசினார்.
பயிற்சி பட்டறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வக பணியாளர்கள் முகுந்தன், மகாராஜா ஆகியோர் தண்ணீரின் தன்மைகள், பகுப்பு ஆய்வு முறைகள் குறித்தும், வேளாண் கல்வி சூழல் ஆர்வலர் சுரேஷ்குமார் பிளாஸ்டிக் பை உபயோக தீமைகள் மாற்றாக மிக எளிமையாக காகித பை நேரடியாக தயாரித்தல் மற்றும் விதைப்பந்து தயாரித்தல் குறித்தும், புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் ஆசிரியர் காளிராஜ் குப்பைகளிலிருந்து பயனுள்ள வினிகர், இயற்கை பூச்சிகொல்லி, மரக்கரி உட்பட பல பொருட்கள் தயாரித்தல் குறித்தும், வனவர் கேசவன் மரக்கன்று நடுதல், பராமரித்தல் குறித்தும், கலைமுதுமணி ராமமூர்த்தி தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கலை பொருட்களாக மாற்றுதல் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
இதில் 27 பள்ளிகளிலிருந்து 275க்கும் மேற்பட்டமாணவ மாணவிகள்,தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் எட்டயபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பசுமைபடை ஆசிரியர் அனுசுயா நன்றி கூறினார்.