தூத்துக்குடி மாவட்டம், புதுார் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஒரே ஒருவர் தான் தி.மு.க.,வை சேர்ந்த 13 வது வார்டு கவுன்சிலர் பெருமாள்சாமி.
விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., மார்கண்டேயன் ஊரான ராமச்சந்திரபுரம் வார்டில் இருந்து வெற்றி பெற்று கவுன்சிலராக பெருமாள்சாமி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், திமுகவில் அதிருப்தியில் இருந்த கவுன்சிலர் பெருமாள் சாமி, விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் ஏற்பாட்டின் பேரில் திமுகவில் இருந்து விலகி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க, வில் இணைந்தார்.
அருகில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏக்கள் சின்னப்பன், மோகன், புதுார் ஒன்றிய சேர்மன் சுசிலா தனஞ் செயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதுார் யூனியனில் ஒரே ஒரு தி.மு.க., கவுன்சிலர் மட்டுமே இருந்தார். அவரும் அ.தி.மு.க,விற்கு தாவி விட்டதால் ஆளும் கட்சி கவுன்சிலர் ஒருவர் புதுார் யூனியனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.