குளத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர்முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது குளத்தூர் பகுதியில் ஒரு பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், அவர் சூரங்குடி நடுத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரபாண்டியன் (45) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடம் விற்பதற்காக இருசக்கர வாகனத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் சுந்தர பாண்டியனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.16,000 மதிப்புள்ள 1,860 புகையிலை பாக்கெட்டுகள், இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கபணம் ரூ.9ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.