ஒருவர் செய்த தவறை வைத்து மொத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் பழிசுமத்தக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதாகியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டது தொடர்பாக அவர் கூறியதாவது;
ஒரு மனிதன் தவறுசெய்ததற்கு ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு என்று சொல்லிவிட முடியாது. அதேபோல, தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக மொத்த காவல்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது.
தவறு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இதனை அரசியலாக பார்க்கக்கூடாது. ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தென்மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் படுகொலைகள் அதிகரித்துள்ளதாகவும் தமிழகம் முழுவதுமே கொலை களமாக மாறி வருவதாகவும் கூறினார்.