தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தை சுற்றி முளைக்கும் திடீர் நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே, ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.52 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையமானது மாநகரின் குறுகிய பகுதிக்குள் அமைந்துள்ளதால், அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இந்த பேருந்து நிலையத்தை மாநகரின் புறநகர் பகுதியில் இடமாற்றம் செய்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் அது பலன் அளிக்காமல் போய், மீண்டும் அதே இடத்தில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அமைந்தது, பொதுமக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கக்கூடிய சூழலில், தற்போது பேருந்துநிலையத்தின் வாசல் பகுதிகளில் புதிய நடைபாதை கடைகள் முளைத்திருப்பது, மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு விமோச்சனம் என்று பிறக்குமோ என்ற புலம்பலை பொதுமக்களுக்கு தந்துள்ளது.
ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய சுற்றுவட்டார பகுதிகளில், தற்போது திடீரென முளைத்திருக்கக்கூடிய ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை ஆரம்பத்திலேயே அனுமதி மறுத்து அப்புறப்படுத்த, போக்குவரத்து காவல்துறையும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமும் முன்வர வேண்டும். இல்லையேல், தற்போது பேருந்து நிலைய வாசலில் அமைக்கப்பட்ட கடையானது, புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே வளாகத்தை ஆக்கிரமித்து இருப்பது போல, பழைய பேருந்து நிலையத்தின் உள்ளேயும் கடை விரித்து ஆக்கிரமிக்க கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
தூத்துக்குடி காய்கனி மார்கெட் அருகில் மாநகராட்சி சார்பில் பல அடுக்கு வாகன காப்பகம் அமைக்கப்பட்டும், அங்கே போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் போக்குவரத்து காவல்துறையும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமும், இந்த ஒரிரு திடீர் நடைபாதை கடைகளையாவது அப்புறப்படுத்தி, கொஞ்சம் மாநகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு முடிவு தருமா என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்