• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் உலக மீனவர் தின விழா : தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு

  • Share on

தூத்துக்குடியில் இன்று (21.11.2023) நடைபெற்ற உலக மீனவர் தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை விருந்தினராகப் பங்கேற்று மீனவ சமுதாயத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வழிவந்தவர்கள் மற்றும் மீனவ சமூக பிரதிநிதிகளை சிறப்பித்தார்.

மீனவர் சமூகத்தின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி முதல் கடலூர் வரை உள்ள ஆழ்கடல் மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்:-

தேசிய பொருளாதாரத்துக்கும் கடலோர பாதுகாப்பின் முன்களத்திலும் நின்று நமது மீனவர் சமூகம் வழங்கும் மகத்தான பங்களிப்பைப் பாராட்டினார்.

மீனவ சமூகங்களின் உறுப்பினர்களுடன் முந்தைய சந்தர்ப்பங்களில் தாம் மேற்கொண்ட பல்வேறு கலந்துரையாடல்களின் போது, மீன்பிடி தொழிலில் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அறிந்து கொண்டதாக ஆளுநர் கூறினார். மீனவ சகோதர, சகோதரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஏற்கெனவே மத்திய மீன்வளத்துறை அமைச்சர்  பர்ஷோத்தம் ரூபாலா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் தாம் விவாதித்திருப்பதாகவும், மேலும் மாநிலத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். தமது கவனத்துக்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளையும் தொடர்ந்து கவனிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

சுமார் 20 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டுள்ள பிரத்யேக பொருளாதார மண்டலம், அதன் செழுமையான கடல் வளம் ஆகியவற்றைக் குறிப்பிடும் போது, “நமது மீனவ சமூகத்தின் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும்” என விருப்பம் தெரிவித்த ஆளுநர், “இது சுயசார்பு பாரதம் உருவாக்கத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்,” என்று  குறிப்பிட்டார். 

24 மீட்டர் மற்றும் அதற்கு அதிகமான நீளம் கொண்ட படகுகளை பதிவு செய்வது தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார். பஞ்சாயத்துகள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளில் மீனவ சமூகத்தின் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்தும் ஆளுநர் கவலை தெரிவித்தார். மத்திய அரசின் கீழ் இயங்கக் கூடிய சிறப்பு தேசிய கடல்சார் காவல் படை தேவை என்றும், அதில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

மீனவர்கள், அவர்களின் நலன்கள், மீன்வள மேம்பாடு ஆகியவை பிரதமர்  நரேந்திர மோடிக்கு மிகவும் விருப்பமானவை என்றும் மீன்வளத்துக்காகவே பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற மீன்வள திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக  குறிப்பிட்ட ஆளுநர்,

இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தாம் சென்றிருந்தபோது அங்கு மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த யோகாசனம் பயின்ற இளம் தலைமுறையினருடன் தாம் கலந்துரையாடிய அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். 

முன்னதாக, தூத்துக்குடியில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான தூய பனிமய மாதா தேவாலயத்துக்கு சென்ற ஆளுநர், அங்கு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், நம் பாரத தேசத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தார்.

இந்நிகழ்ச்சியில், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், செயல்பாட்டாளர்கள், மீனவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் முதலுதவி மையம் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மகா தீபம் கொப்பரையின் முழு விபரம் இதோ!

  • Share on