• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் ( ? ) குவிமாடத்துடன் கூடிய திருஉருவச்சிலை திறப்பு விழாவும் சர்ச்சைகளும்!

  • Share on

தூத்துக்குடியில் இன்று திறக்கப்பட்ட குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தில் அவர் குறித்த எவ்வித அடிப்படைத் தகவலும் இல்லாமல், வெறும் காட்சி பொருளாக அவரது சிலை மட்டுமே இருக்கக்கூடிய மணி மண்டபம் அமைந்துள்ளது குறித்து, சமூக ஆர்வலர்கள், மீனவ மக்கள் என பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரம் தூத்துக்குடியில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். 


இந்தக் குடி நீர்ப்பிரச்சினைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார். அவருக்கு தூத்துக்குடியில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது பரதர் சமுதாயத்தை சேர்ந்த மீனவர்களின் கோரிக்கையாக இருந்தது.

சட்டமன்ற தேர்தலின் போது, தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குரூஸ் பர்னாந்துக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். தேர்தல் நேர வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்காவில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த மணிமண்டபத்தை, இன்று (15.11.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


தூத்துக்குடியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தற்போது குரூஸ் பர்னாந்து மணிமண்டப விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதால், பரதர் குலத்தை சேர்ந்த மீனவ மக்கள் பலர் இந்த மணிமண்டப திறப்பு விழாவில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் திமுக மிகப்பெரிய சரிவை சந்திக்கக்கூடிய சூழல் இருப்பதாக கருதப்படுவதால் கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுக வினர் முகங்கள் இன்றைய மணிமண்டப திறப்பு விழாவில் இறுக்கத்துடனே காணப்பட்டது.

திமுகவில் உள்ள மீனவர் சமுதாய மக்களை தாண்டி, அமைப்பு ரீதியாகவோ, தனிநபர்களோ திமுக அரசு அமைத்துள்ள இந்த குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தை ரசிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதனாலேயே, இன்றைய மணிமண்டப திறப்பு விழாவை யும் திமுக அரசை வாழ்த்தியும் வால்போஸ்டர், டிஜிட்டல் பேனர், நாளிதழ் விளம்பரம் என எந்தவொரு விளம்பரம் படுத்தும் செயலிலும் ஆர்வம் காட்டவில்லை.

மணிமண்டத்தில் சிலையைத் தவிர, அவரது வரலாற்றை தெரிந்துகொள்ள எவ்வித தகவல்களும் மணிமண்டபத்தில் இல்லாதது குறித்து, ஏமாற்றம் அடைந்து வருவதாக மீனவ சமுதாய மக்களும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். மண்டபத்தில் அவரைப் பற்றிய எந்தவித அடிப்படைத் தகவல்களும் இல்லாத நிலை அதிர்ச்சி அளிக்கிறது. மண்டபத்தின் வெளியே அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே தவிர, வேறு எந்த தகவலும் இல்லை. பொதுவான சுற்றுலா பிரயாணிகள் இங்கே வந்தால் அவர் குறித்து எதுவும் தெரிந்து கொள்ள இயலாது. 


சுற்றுச்சுவர், புல்தரை, ஒரு முழுதிருஉருவச்சிலைக்கு ரூ.77.87 இலட்சம் செலவிடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், நுழைவு வாயிலில் ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் மணிமண்டம் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய திறப்பு விழா நிகழ்வில் செய்தி துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள மேடை விளம்பர பேனர் மற்றும் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் மணிமண்டம் திறப்பு விழா என பயன்படுத்தாமல் குவிமாடத்துடன் கூடிய ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் முழுஉருவச்சிலை என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் மணிமண்டம் குரூஸ்பர்னாந்துக்கு கிடையாது? தற்போது சிலை திறப்பு மட்டும் தான் நடந்துள்ளதா? மணிமண்டம் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லையா? 


இடம் தேர்வில் இருந்து மணிமண்டம் திறப்பு விழா வரை தொடர்ந்து குரூஸ் பர்னாந்து சார்ந்த விவகாரத்தில் திமுக அரசு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து வர காரணம் என்ன? மீனவ சமுதாய பிரதிநிதிகளையும் மக்களையும் இந்த அரசு வஞ்சிக்கிறதா? என அம்மக்கள் கருதுவதாக  சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, குரூஸ் பர்னாந்து மணிமண்டப விவகாரத்தில் திமுகவின் செயல்பாடுகளுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக வருகிற 25ஆம் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை வைத்து மீனவர் நாள் நிகழ்ச்சியை அவர்கள் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்விழாவில் ஆளுநர் உரையும், மீனவர்களின் குரலும் திமுகவிற்கு பெரிய தலைவலியை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது


இப்படி பல்வேறு சர்ச்சைகளுடன் குரூஸ் பர்னாந்து மணிமண்டம் ( ? ) குவிமாடத்துடன் கூடிய  திருஉருவச்சிலை திறப்பு திமுகவிற்கு  பலன் அளிக்குமா? பாதகமாகுமா? என்பதை இனி வரும் காலங்களில் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்

  • Share on

குரூஸ் பர்னாந்து சிலைக்கு மதிமுக மரியாதை

அழுகிய முட்டை புகார் - அமைச்சர் கீதாஜீவன் விளக்கத்தால் டிரெண்ட் ஆகும் முட்டை விவகாரம்!

  • Share on