தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த 3வது நாளில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி முருகேசன் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மகன் மாரி செல்வம் (24). இவரும் திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த அக்.30 ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதிகள் முருகேசன் நகரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் ஒரு கும்பல் முருகேசன் நகரில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கணவன்-மனைவி 2பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.