ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 10-ந்தேதி நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள ஓடு தொழிற்சாலை ஒன்றில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இன்று தூத்துக்குடி வழியாக ரஜினி சென்னை சென்றார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்கு பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பிற்காக வந்தேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மக்கள். அவர்களை பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ரஜினியிடம், நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள 'லியோ' படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், 'அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள். லால்சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகும்' இவ்வாறு அவர் கூறினார்.