தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் பழனிசாமி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இதையொட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முதல் தடுப்பூசி மருத்துவ பணியாளர் முருகப் பெருமாள் என்பவருக்கு போடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியர் டாக்டர் ராஜேஷ், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.