தூத்துக்குடியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மதபோதகர் ரூ. 5 லட்சம் மோசடி செய்ததாக ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அந்த ஆசிரியைக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனம் உடைந்த ஆசிரியை தூத்துக்குடிக்கு வந்து உள்ளார். பின்னர் மன அமைதிக்காக, தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தியான இல்லத்துக்கு சென்று வந்தாராம்.
அப்போது அங்கு இருந்த மத போதகர் ஆசிரியைக்கு ஜெபம் செய்தாராம். தொடர்ந்து ஆறுதல் வார்த்தைகளை கூறி உள்ளார். இதனால் அவர்கள் நெருங்கி பழகினார்களாம். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஆசிரியையிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த ஆசிரியை மதபோதகரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம். ஆனால் அந்த மதபோதகர் மறுத்து விட்டாராம். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த ஆசிரியை மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.