கோவில்பட்டி வட்டத்தில், தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட கணக்கெடுக்கும் பணிக்காக நடைபெறும், சிறப்பு முகாமில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவில்பட்டி வட்டாட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
கோவில்பட்டி வட்டத்தில், விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள், தொடர் மழையினால் சேதமடைந்ததாக வரப்பெற்ற செய்திகளின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணத் தொகை வழங்கிட கணக்கெடுப்பு பணி அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, இப்பணியினை விரைவாகவும் எவ்வித புகாரும் இன்றி செய்திட ஏதுவாக, கோவில்பட்டி வட்டத்தில், வருகிற ஞாயிறு ( 17.1.2021 ), திங்கள் ( 18.1.2021 ), மற்றும் செவ்வாய் ( 19.1.2021 ), ஆகிய மூன்று நாட்கள் அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாம் நாட்களில், பாதிக்கப்பட்ட விவசாயிகள், கீழ்கண்ட ஆவணங்களின் நகல்களுடன், கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- பட்டா நகல்
- அடங்கல் நகல் ( ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றிருந்தால் மட்டும் )
- பட்டாதாரர் ஆதார் நகல்
- குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு )
- பட்டாதாரர் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல்.