தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமாக பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில், தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என்றும், ஒரு ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும். பேராசிரியர்களுக்கு துனை போகும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.