தூத்துக்குடியில் தேங்கியுள்ள மழை நீரை, போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்றக்கோரி தூத்துக்குடி பாஜக இளைஞர் அணி சார்பில், சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் வாழைக் கன்று நட்டு வைத்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகள் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் பல்வேறு தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. ஒரு சில இடங்களில் மழையால் வீடுகள் இடிந்தும் , மரங்கள் முறிந்தும் போயின.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்றிட வலியுறுத்தி, தூத்துக்குடி பாஜக இளைஞர் அணி சார்பில், காமராஜ் கல்லூரி அருகே உள்ள, அக்சார் பெயிண்ட் தொழிற்சாலை சந்திப்பு சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் வாழைக்கன்று நட்டு வைத்து நூதனப் முறையில் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் , பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பால்ராஜ், பொன் குமரன், இளைஞர் அணி பொதுச் செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ், மாவட்டச் செயலாளர்கள் மான்சிங் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மேற்கு மண்டல தலைவர் ராஜவேல் முருகன், வடக்கு மண்டல தலைவர் எஸ்.பி.எஸ் கனகராஜ், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி பொறுப்பாளர் ஓம் பிரபு உள்ளிட்ட பாஜக இளைஞரணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.