திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 1½ வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீசார் தேனிக்கு விரைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ்-ரதி தம்பதியின் 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ். முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை 40 வயது மதிக்கத்தக்க பெண் கடத்தி சென்றார். இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பெண் ஒரு ஆணுடன் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் தப்பி சென்றது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அந்த பெண் தேனி பகுதிக்கு சென்றதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தேனிக்கு விரைந்து உள்ளனர். விரைவில் குழந்தை மீட்கப்படும் என காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.