ஆறுமுகநேரி அருகே சாலையோர வாய்கால் பள்ளத்தில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெரியாயிபாளையம் அம்பாள் காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 53). இவர் தனது மனைவி கோமதி, மகள்கள் ஐஸ்வர்யா, கவுசிகா, மகன் கேசவன் மற்றும் உறவினர்களான ஜெகன், லட்சுமி ஆகியோருடன் ஒரு காரில் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டார். காரை சங்கர் என்பவர் ஓட்டினார்.
கார் நள்ளிரவில் ஆறுமுகநேரி அருகே சாகுபுரம் விலக்கில் உள்ள வளைவு பாலத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென பாலத்தின் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்கால் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த ரவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்து அலறினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரவி உள்பட 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.