• vilasalnews@gmail.com

தசரா திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடினால் கடும் நடவடிக்கை - டிஎஸ்பி எச்சரிக்கை

  • Share on

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடனம் ஆடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுக்கள் கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை பிரிப்பார்கள். தசரா குழுவினர் திருவிழாவின் போது நடந்து கொள்ளும் முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் அருகில் உள்ள சிவனணைந்த பெருமாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

திருச்செந்தூர் உதவி ஆட்சியர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாசில்தார் வாமனன், துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ், போக்குவரத்து துறையைச் சேர்ந்த மயிலேறும் பெருமாள், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் ரகுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார்.

100-க்கு மேற்பட்ட தசரா குழுவின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர். பெரும்பாலானவர்கள் 9, 10, 11-ம் திருவிழா நாட்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். 24-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் 25-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் திருவிழாவில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனவே நான்கு மாவட்டங்களில் மட்டும் வருகிற 25-ந் தேதி விடுமுறை விட வேண்டும். வாகனம் நிறுத்தும் இடங்களில் குடிநீர், கழிப்பிடம் வசதி செய்து தரவேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் எந்த ஊருக்கு எத்தனை மணிக்கு புறப்படும் என போக்குவரத்து துறை மூலம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கடற்கரையில் பெண்களுக்கு கூடுதல் கழிப்பிட வசதி மற்றும் உடை மாற்று அறை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் கூறுகையில், 'தசரா குழுக்களின் ஆலோசனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் விரிவாக செய்யப்படும்' என்றார்.

காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் கூறுகையில் 'சாதி அடையாளங்களுடன் கூடிய கொடி, டீசர்ட் அணிந்து வருவது, கலைநிகழ்ச்சியின் போது ஆடல் பாடல் நிகழ்வில் ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனம் இடம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவிழா நாட்களில் இரும்பினால் செய்யப்பட்ட கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்த கூடாது' என தெரிவித்தார்.

போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, மெயின் ரோடுகளில் வாகனங்களை நிறுத்த கூடாது. பார்க்கிங்கில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். மீறி நிறுத்தினால் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் பாதுகாப்பு இல்லாத லோடு ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்று தெரிவித்தனர்.

கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் தங்கமாரி, உடன்குடி வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சண்முக விஜயன், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி உப்பளத்தில் தீ விபத்து

சாலையோர வாய்கால் பள்ளத்தில் கார் விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்

  • Share on