தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் தாலுகா, சூரங்குடி பகுதி வேம்பார் ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உடலை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த விஜி மகன் காளிமுத்து (19), அதே பகுதியியை சேர்ந்த காந்தி மகன் ரஞ்சித்குமார் (19) ஆகிய இருவரும் நண்பர்களுடன் நேற்று (14.01.2021) மாலை பாலத்தின் அடியில் ஆற்றில் குளிக்கச் சென்றனர். குளிக்கச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் திரும்பவராததால் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூரங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடினர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஜெயக்குமார் உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், விளாத்திக்குளம் காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் முனியசாமி, குருசாமி மற்றும் காவல்துறையினர், தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சங்கு குளியாள் குமார் என்பவர் தலைமையில் 6 பேர், தீயணைப்புத்துறை அலுவலர் இருதயராஜ் தலைமையில் 5 பேர் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனடியாக அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்டோர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இந்த தேடுதலில் வேம்பாரைச் சேர்ந்த காந்தி மகன் ரஞ்சித்குமார் (19) மட்டும் வேம்பார் அக்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரான காளிமுத்துவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சின்னப்பன் எம்எல்ஏ நேரில் ஆறுதல்
காலை முதலே மீட்பு பணிகளில் உடனிருந்து கவனித்து வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒரு இளைஞரின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.