காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி வெளியூர் செல்வதற்காக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்ல போதிய பேருந்து வசதியில்லாததால் அங்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதையொட்டி நகர்புறத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் புறப்பட்டு சென்றனர். இதனால் பேருந்து, ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, ஈரோடு, தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் நீண்ட நேரமாக காத்திருந்து செல்ல வேண்டிய நிலையிருப்பதாக பயணிகள் கவலை தெரிவித்தனர். இது போன்ற நேரங்களில் பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.