மாவட்டத்துக்கு ஒரு நடைப்பயிற்சி பாதை என்ற அடிப்படையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் ‘ஹெல்த் வாக்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கொரோனாவுக்குப் பின்னர் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நகர்ப்புறங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள இடம் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு சுகாதார விழிப்புணர்வுத் திட்டமாக ‘ஹெல்த் வாக்’ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதில், மாவட்டந்தோறும் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு நடைபாதை என்ற அடிப்படையில், 38 மாவட்டங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைய உள்ளன.
இவற்றில், குடிநீர், இருக்கை வசதிகளுடன், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் நடைபாதையைப் பராமரிக்கும்.
தூத்துக்குடியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட உள்ள ரோச் பார்க் கடற்கலை சாலையை, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் உள்ளிட்டோருடன் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.