• vilasalnews@gmail.com

அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை கலைத்து ஆடத்தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி... அடுத்து தூத்துக்குடி தானாம்!

  • Share on

அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்களை கொண்ட அ.தி.மு.க-வில் 82 ஆக உயர்த்தியும், பல மாவட்டங்களில் பிரித்து புதியவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கி, மாவட்ட செயலாளர்களை மாற்றி கலைத்து ஆடியிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டமும் இனி இருக்கலாம் என்பதுதான் உள்ளூர் கட்சிகாரர்களின் முனுமுனுப்பாக உள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவின் அரசியல் களம் மாறியது. தென் மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தனது ஆதரவாளரான எஸ்.பி.சண்முகநாதனுக்கு மாவட்ட அளவில் கட்சி பதவி கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார். இதனால் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் வடக்கு மாவட்டமாகவும், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகள் தெற்கு மாவட்டமாகவும் பிளவுபட்டது.

இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். செல்லப்பாண்டியன் அதிருப்தி அடையக்கூடாது என்பதற்காக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் மாவட்ட செயலாளர் தான் அதிகாரம் மிக்கவர் என்பதால் செல்லப்பாண்டியன் அதிருப்தியிலேயே இருந்து வந்தார்.

அதனையடுத்து, ஒரிரு மாதங்களுக்கு முன்பு சி.த. செல்லப்பாண்டியன் ஓபிஎஸை சந்தித்தார். இதனால் அவர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவியதாக தகவல் பரவ, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈபிஎஸ் தரப்பு செல்லப்பாண்டியனை சந்தித்து பேசியது. இதற்காக கடம்பூர் ராஜூ பேச்சுவார்த்தை நடத்தி டீலிங்கை கச்சிதமாக முடித்து, இரண்டு வாக்குறுதிகளை ஈபிஎஸ் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒன்று, தூத்துக்குடி மாவட்டத்தை மூன்றாக பிரித்து ஒரு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படும். இரண்டாவது, வரும் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். இந்த டீலிங்கிற்கு செல்லப்பாண்டியன் ஓகே சொல்ல எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டதாம். இதனையடுத்து, தூத்துக்குடியில் சி.த.செல்லப்பாண்டியன் வேகமாகவும், உற்சாகமாகவும் கட்சி பணியாற்றி செயல்படுவதோடு, வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவோடும் மிகவும் இணக்கமாகவும் இணைந்து விட்டார்.


தூத்துக்குடி அதிமுகவில் சி.த. செல்லப்பாண்டியன் வருகையும், வளர்ச்சியும், உட்கட்சி எதிர்தரப்பான தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு கலக்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே, தெற்கு மாவட்டத்தில் வரக்கூடிய மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியை பிரித்து சி.த. செல்லப்பாண்டியனுக்கு புதிய மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி கொடுப்பதில், சி.த. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக முக்கிய பங்கு வகித்து வருவது கடம்பூர் ராஜூ தான் என தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கருதுவதால், தற்போது கடம்பூர் ராஜூக்கும் சண்முக நாதனுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதாக உள்ளூர் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அதுமட்டுமின்றி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார் சி.த. செல்லப்பாண்டியன். ஆகவே, அவருக்கு தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளை உள்ளடக்கி தூத்துக்குடி மத்திய மாவட்டமாகவோ அல்லது தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளை உள்ளடக்கி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளராகவோ நியமிக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வந்துவிட்டார்.


ஆனால், அதற்கு சண்முகநாதன் எதிர்ப்பு தெரிவித்தாலும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக சசிகலா தேர்வு செய்த போது, ஓடும் பேருந்தில் இறங்கி ஓபிஎஸ் பக்கம் சென்றவர் தான் இந்த சண்முகநாதன் என்ற சம்பவம் எடப்பாடி பழனிச்சாமியின் நினைவுக்கு வந்து செல்வதால், சண்முகநாதனின் எதிர்ப்பையும் தாண்டி தூத்துக்குடியை மூன்றாக பிரித்து சி.த. செல்லப்பாண்டியனுக்கு மாவட்ட செயலாளர் பதவியை கொடுக்கும் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துவிட்டாராம்.


அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்களை 82 ஆக உயர்த்தியும், பல மாவட்டங்களில் பிரித்து புதியவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கி, மாவட்ட செயலாளர்களை மாற்றி கலைத்து ஆடியிருக்கிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் தொடரும் எனவும், அந்த அடுத்த கட்ட ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளராக சி.த.செல்லப்பாண்டியன் இடம் பெறுவார் என அதிமுக வட்டாரங்கள் மற்றும் சி.த.செல்லப்பாண்டியன் ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

  • Share on

தமிழகத்தில் வீரியம் காட்டும் டெங்கு காய்ச்சல் - தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிமுக கவுன்சிலர் கோரிக்கை

விளாத்திகுளத்தில் மயானம் செல்ல பாதை இல்லை - நடவடிக்கை எடுப்பதாக மார்கண்டேயன் எம்எல்ஏ உறுதி!

  • Share on