தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த சச்சின் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், தென் மாவட்டத்தில் மதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் நான்குவழி சாலையாக தேசிய நெடுஞ்சாலை NH 38 அமைந்துள்ளது.
இந்த சாலை தூத்துக்குடி – மதுரை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியில் பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ள நிலையில், வாகைகுளத்தில் உள்ள டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முறையாக இந்த சாலை பராமரிக்கப்படுவதில்லை.
அதாவது, 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது? சாலை பணிகள் முழுமையடையாத போது சுங்கச்சாவடி வசூல் பணிகள் ஏன் துவங்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், பதில் தாக்கல் செய்யும் காலம் வரை வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். வாகைகுளம் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு நாளாவது 50% கட்டண வசூல் செய்தே ஆக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சுங்க சாவடி கட்டண உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள் அப்பொழுது தான் இடைக்கால தடை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.