• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • Share on

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடியில், தேவையற்ற திட்டத்தால் சங்கம் நஷ்டம் அடைந்தால் தங்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நேற்று கோரிக்கை மனுவுடன் குவிந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ச.பாலமுருகன் தலைமை தாங்கினார். கவுரவ செயலாளர் மா.ஜேசுராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் செ.கணேசன், துணைத் தலைவர்கள் கி.தம்பிராஜ், அ.பெனிஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பி்ன்னர் நிர்வாகிகள் கூட்டுறவு இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள 4,550 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் பல்வேறு விதமான தேவையற்ற வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க கூட்டுறவு கடன் சங்கங்களை துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். விவசாய நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவையற்ற பணிகளை மேற்கொள்வதால், ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் சங்கங்கள் மேலும் அழிவை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலையில் உள்ளன.

இந்த திட்டத்தின் செயல்பாட்டால் எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படும் நிலையில் சங்க பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதையும், பணி ஓய்வு பெறும் நாளில் நிதி பலன்களை வழங்காமல் நிறுத்தி வைப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும். மேலும், வாங்கும் உபகரணங்கள் அனைத்தும் அரசு மானியத்தில் வழங்க வேண்டும்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவி்ல்லை என்றால் வருகிற 3-ந் தேதி சங்கங்களில் உள்ள விவசாய கருவிகள் அனைத்தையும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு அலுவலக பணியாளர்கள் அனைவரும் தொடர் விடுப்பில் செல்லுதல் போன்ற போராட்டங்களை நடத்துவோம் என்று கூறி உள்ளனர்.

  • Share on

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடியில் அனல் நிலையத்தில் 2 யூனிட் நிறுத்தம்

  • Share on