பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு மர்ம நபர் விடுத்த கொலைமிரட்டல் தொடர்பாக காவல் துறையிடம் புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறை காலதாமதம் படுத்திவருகிறார்கள் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துத்துடி மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழர் விடியல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தனராஜ் கூறுகையில் :-
கடந்த 17.9.2023 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலையில் இருந்து தெற்கு காவல் நிலையம் அருகில் இருக்கும் தந்தை பெரியார் சிலை வரை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சமூக நீதி பேரணி நிகழ்வு நடத்தினோம். இதில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், சமூக நீதியை வலியுறுத்தியும், சனாதனத்தை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியை மேற்கொண்டோம்.
இந்த நிலையில், மறுநாள் ( செப்.,18) காலை 5.50 மணி அளவில் எனக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் இருந்து பேசிய நபர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, எனது குடும்பம், பெரியாரை பற்றி மிகவும் கீழ்தரமாகவும் ஆபாசமாகவும் பேசினார்.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அன்று (செப்.,18) தூத்துக்குடி மாநகர துணை காவால் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தோம். ஆனால், புகார் கொடுத்து ஒரு வாரம் ஆன நிலையிலும் இதுவரை புகார் தொடர்பாக விசாரனையானது மிக தாமதமாக செல்வதோடு, எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. கொலை மிரட்டல் விவகாரம் கொலையில் முடிவதற்குள் காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கைது செய்து, எங்களுக்கு பாதுகாப்பு அளித்திட கேட்டுக்கொள்கிறோம். என அவர் தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, பால்பிரபாகரன், தாஸ், அசன், ஜலால் முகமது, பிரசாத், சுஜித், தமிழன் டேவிட், கமலேஸ் மாடசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.