தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் மறுசீரமைப்பு பணிகள், பக்கிள் ஓடை தூர் வாருதல் பணிகள், நகர்புற நலவாழ்வு மையம் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, பாத்திமாநகர், லயன்ஸ்டோன் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மறுசீரமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் பணிகளை துரிதமாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
அதே போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகரில் எந்த ஒரு பகுதியிலும் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் பல நடவடிக்கைகள் மேயர் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, பி.என்.டி காலனி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வரும் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் இருந்து கடற்கரை வரை மொத்தம் 6 கிமீ தூரத்திற்கு பக்கிள் ஓடை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மடத்தூர் பகுதிக்கு நேரில் சென்று அப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, புல்தோட்டம் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதனை சுற்றிலும் சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அதனை ஆய்வு செய்து, அருகில் புதிதாக அமைய இருக்கும் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், கண்ணன், சுகாதார அலுவலர் ராஜசேகர், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) சேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.