வந்தேபாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய ரெயில்வே அமைச்சருக்கு இது தொடர்பாக எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி ரெயில் நிலையம் ஏ கிரேடு ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் சுற்று வட்டார மக்களின் தொழில் மற்றும் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த ரெயில் நிலையத்தை ஏற்கனவே கடந்து செல்லக்கூடிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும், நெல்லை-சென்னை வந்தேபாரத் ரெயிலும், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லை. ஆகையால் நெல்லை-சென்னை வந்தேபாரத் ரெயில், டெல்லி-கன்னியாகுமரி வாராந்திர ரெயில், சென்னை-கன்னியாகுமரி தினசரி ரெயில், நாகர்கோவில்-சென்னை ரெயில் (வெள்ளிக்கிழமை மட்டும்), கன்னியாகுமரி-ராமேசுவரம் ரெயில் (வாரம் 3 நாட்கள்), செங்கோட்டை-தாம்பரம் ரெயில் (வாரம் 3 நாட்கள்) ஆகிய ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.