• vilasalnews@gmail.com

பல ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதி இல்லை - எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்!

  • Share on

ஈராச்சி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாறுகால் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவை செய்து கொடுக்கப்படாததால் பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஈராச்சி கிராமத்திலுள்ள ஆதிதிராவிட மக்கள் நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை அக்கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். ஈராச்சி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் காவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், யூனியன் ஆணையாளர் ராணி மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், அந்த கிராமத்திலுள்ள ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்

  • Share on

தூத்துக்குடி கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி தனியார் நிதிநிறுவனத்தில் ரூ. 53 லட்சம் மோசடி - 3 பேர் கைது

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. வைத்த கோரிக்கை!

  • Share on