கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆள்மாறாட்டம் செய்து ஒரு ஏக்கர் 68 செண்ட் நிலத்தை மோசடி செய்ய போலியான அரசாங்க முத்திரை தயார் செய்து உடந்தையாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு கோவில்பட்டி அய்யனேரி கிராமத்தில் கிராம சர்வே எண். 335/2Aல் 1ஏக்கர் 68 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. மேலும் மேற்படி சண்முகம் என்பவருக்கு சண்முகத்தாய் மற்றும் காளியம்மாள் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் சண்முதாய்க்கு ஆண் மற்றும் பெண்கள் என 7 பிள்ளைகளும், இரண்டாவது மனைவி காளியம்மாளுக்கு ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
இந்நிலையில் மேற்படி நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியை சேர்ந்தவர்களான ராமசாமி மனைவி கருப்பாயி (48), பெருமாள் மனைவி கணபதியம்மாள் (60), கணேசன் மனைவி மகேஸ்வரி (41) ஆகியோர் சேர்ந்து சண்முகத்தின் இரண்டாவது மனைவி காளியம்மாள் என்பவரை கடந்த 1975ம் ஆண்டு அவர் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக கூறி கடந்த 2001ம் ஆண்டு போலியான வாரிசு சான்றிதழ் தாயார் செய்து அதில் மேற்படி கருப்பாயி போலியான வாரிசு சான்று பெற்றும், கணபதியம்மாள் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தும், மேற்படி சண்முகத்தின் 1 ஏக்கர் 68 செண்ட் நிலத்தை மோசடி செய்துள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த முத்தையா மகன் செல்வக்குமார் (34) என்பவர் மேற்படி நபர்களுக்கு உடந்தையாக போலியான அரசாங்க முத்திரை தயார் செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த மேற்படி சண்முகத்தின் மகன் அழகுமுத்து (67) மற்றும் இறந்ததாக கூறப்பட்ட இவரது சித்தி காளியம்மாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 2022ம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் மேற்படி காளியம்மாள் என்பவர் கடந்த 27.02.2023 அன்று இறந்துவிட்டார். கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் கடந்த 01.06.2023 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த்க்கு மேற்படி நபர்கள் நிலத்தை மோசடி செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை தொடரந்து அழகுமுத்து அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மேற்படி செல்வக்குமாரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்ற எதிரிகளை தேடி வருகின்றனர்.