தூத்துக்குடியில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்த கனியின் என்பவரது மனைவி அந்தோனியம்மாள் ( வயது 68 ). ஓய்வு பெற்ற துறைமுக ஊழியரான கனி இறந்த நிலையில், இவர்களின் ஒரே மகனும் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் இறந்தார். இதனால் தனியாக வசித்து வந்த அந்தோனியம்மாள் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி கொடூரமான நிலையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க நகைகள் திருடு போயிருந்தன.
இச்சம்பவத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிந்து விசாரித்த வடபாகம் போலீசார், பிரேத பரிசோதனையில் மூதாட்டி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததும் கொலை வழக்காக மாற்றியதோடு தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இவ்வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு துப்பு துலங்கிய போலீசார், இதில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளை பாண்டி மகன் சந்தனராஜ் ( வயது 24 ) என்பவரை கைது செய்தனர்.
கைதான சந்தனராஜ் மீது சிப்காட் மற்றும் வடபாகம் போலீசில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.