தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா நாளை நடக்கிறது. சத்தியநாராயணர் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்களிக்கிறார்.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நான்கு சனிக்கிழமைகளிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு செல்வர். ஒவ்வொரு சனிக்கிழமையும் வைகுண்டபதி பெருமாளுக்கு அர்ச்சகர் வைகுண்ட ராமன் தலைமையில் நடக்கும் அலங்காரம் மிக நேர்த்தியாக இருக்கும்.
இந்த ஆண்டு புரட்டாசி சனிக்கிழமை விழா நாளை ( 23ம் தேதி ) துவங்குகிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. பின்னர் பெருமாளுக்கு சத்திய நாராயணர் அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பக்தர்களுக்கு தொடர்ச்சியாக காலை முதல் இரவு வரை பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை நடக்கிறது.
இரண்டாம் சனிக்கிழமை குருவாயூரப்பன் அலங்காரத்திலும், மூன்றாவது சனிக்கிழமை பத்மாவதி தாயார் அலங்காரத்திலும், நான்காவது சனிக்கிழமை திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் பக்தர்களுக்கு கட்சி அளிக்கிறார்.
விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து நேற்று மாலை பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவன் கோயில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார் பெருமாள். கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் வரவேற்றார். அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி பாலசங்கர் ஜெயபால் முருகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புரட்டாசி நான்கு சனிக்கிழமை விழாக்களையும் சிறப்பாக நடத்த வேண்டும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.