• vilasalnews@gmail.com

விவசாயிகளுக்கு எதிராக... விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆதரவாக தாசில்தார் அளித்த நோட்டீசுக்கு நீதிமன்றம் தடை!

  • Share on

எம்எல்ஏக்கு ஆதரவாக விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்கள் அளப்பதற்காக தாசில்தார் அளித்த நோட்டீசை உயர் நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

விளாத்திகுளம் ஓ.லட்சுமி நாராயணபுரம் சோலையம்மாள் தாக்கல் செய்த மனு:-

விளாத்திகுளம் மந்தி குளத்தில் எங்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு விவசாயிகள் வண்டி பாதை வழியாக சென்று வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன. காற்றாலைத்துக்கு செல்லும் வாகனங்களால் விவசாய நிலங்களும், சாலை, நீர்நிலைகளும் சேதமடைகின்றன. இது தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்து வழக்கு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூண்டுதலில் காற்றாலை நிறுவனங்களின் வசதிக்காக வண்டிப்பாதை புல எண்களை அளவீடு செய்வதற்காக உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு 47 விவசாயிகளுக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

வண்டிப்பாதை புல எண்களை அளவீடு செய்யக்கோரி மந்தி குளத்தில் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை. விளாத்திகுளம் எம்எல்ஏவுக்கு மந்தி குளத்தில் எந்த நிலமும் இல்லை.

ஆனால் எம்எல்ஏ, தனியார் காற்றாலை நிறுவனங்களுக்கு ஆதரவாக, காற்றாலை வாகனங்கள் செல்வதற்காக, வண்டி பாதை நிலத்தை அளந்து கொடுக்க வேண்டி மனு அளித்ததும், அந்த மனு அடிப்படையில் விவசாயிகளுக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியதும் சட்ட விரோதம்.

ஏற்கனவே மந்திக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வண்டி பாதையை அளவீடு செய்ய கோரி மனு அளித்தார். பின்னர் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக அந்த மனுவை ஊராட்சி மன்ற தலைவர் திரும்ப பெற்றார். தற்போது அதே காரணத்திற்காக எம்எல்ஏ மனு அளித்துள்ளார். எனவே தாசில்தாரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். அதுவரை நோட்டீசை செயல்படுத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். பின் விளாத்திகுளம் தாசில்தாரின் நோட்டீஸ்க்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  • Share on

தூத்துக்குடியில் மாணவர்களிடையே மோதல் - போலீசார் விசாரணை

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

  • Share on