தொண்டு நிறுவனத்தை அவதூறாக பேசி இடையூறு செய்வர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தொண்டு நிறுவன ஆசிரியர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி ஆதவா தொண்டு நிறுவனம் மூலம் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
நாங்கள் ஆதவா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். கடந்த ஆண்டு நிறுவனத்தின் நிறுவனருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக எங்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் சம்பளம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் எங்கள் நிறுவனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர், எங்கள் நிறுவனத்தை பற்றியும், நிறுவனரை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். நிறுவனத்தை தொடர்ந்து நடத்த விடாமல் செயல்பட்டு வருகிறார். ஆகையால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும். எங்களுக்கு தொடர்ந்து பணி கிடைக்க வேண்டும். போலீசாரால் மூடப்பட்ட தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை திறக்க வேண்டும். தொண்டு நிறுவனத்தின் நிறுவனருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது