நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பிரதமர் மோடி தாக்கல் செய்தார். இதனை வரவேற்று தூத்துக்குடியில், பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தூத்துக்குடியை பொறுத்தவரை திமுகவில் குடும்ப அரசியல் இருக்கு. குடும்ப அரசியல் இங்கே திமுகவில் மட்டும் தான் இருக்கிறதா என்பது எங்களது கேள்வியாக இருக்கிறது. இதற்கு பதில் நீங்களே ( செய்தியாளர்கள் ) எடுத்துக்கொள்ளலாம். குடும்ப அரசியல் என்றால் என்ன? ஒரு குடும்பத்தில் இருந்து தான் மட்டும் அல்லாமல் தன்னுடைய மகள், மகன் இருந்தால் அதன் பெயர் குடும்ப அரசியல். இது திமுகவில் இருக்கு. அது உலகம் அறிந்த விஷயம். ஆனால், தூத்துக்குடியில் குடும்ப அரசியல் மற்ற கட்சியிலும் இருக்கா என்பதை நீங்கள் ( செய்தியாளர் ) எழுதனும் என அவர் தெரிவித்தார்.
அதாவது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முகநாதனின் மகனான எஸ்.பி.எஸ்.ராஜா, தூத்துக்குடி மாநகராட்சியின் 59வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மகள் புவனேஸ்வரி சண்முகநாதன் பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். ஆகவே, தூத்துக்குடி அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது என்பதை பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மறைமுகமாக சுட்டிக்காட்டி அதிமுகவை சாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அண்ணா குறித்த அண்ணாமலையின் கருத்திற்காக, அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் பாஜகவிற்கு எதிராக கண்டனங்களை தற்போது பதிவு செய்து வரும் வேளையில், அதனை தங்களுக்கு சாதகமாக கொண்டு உள்ளூர் அரசியல்வாதிகள் தங்களுக்குள் இருக்கும் அரசியல் பகைகளை தீர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் சிலர் பாஜகவினருக்கு எதிரான போஸ்டர்கள், அதிமுக மாவட்ட செயலாளருக்கு எதிராக மறைமுகமாக குடும்ப அரசியல் விமர்சனம் என உள்ளூர் அரசியல் களம் அனல் பறக்கிறது.
வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் கனிமொழி போட்டியிடுவார் என்று உறுதியான நிலையில், அவருக்கு எதிராக அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் பாஜக சார்பில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டுவரும் நிலையில், இந்த முறை தூத்துக்குடி மக்களவை தொகுதியை அதிமுக கூட்டணி கட்சிக்கு விட்டுத்தர தயாராக இல்லை என்றும், அதிமுக சார்பில் பிரபல தொழில் அதிபர் மகனை களம் இறக்க எஸ்பி.சண்முகநாதன் முயற்ச்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தான் இன்று, அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது என சண்முகநாதனை மறைமுகமாக சசிகலா புஷ்பா தாக்கி பேசியுள்ளார் என உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்பு அரசியல் நடவடிக்கைகளுக்கு பஞ்சமா இருக்கப்போகிறது!