பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து காரணமாக அதிமுக பாஜக இடையே கடந்த காலங்களில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது அதில் உச்சக்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். அதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் பாஜக - அதிமுக இடையே போஸ்டர் யுத்தம் துவங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம். கூட்டணியாவது, கூந்தலாவது... நன்றி மீண்டும் வராதீர்கள், கூட்டணியில் பாஜக இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு.. நாளை நமதே... 40ம் நமதே" என்ற வாசகங்களோடு அச்சிடப்பட்டு,
தூத்துக்குடி மாநகர் அதிமுக 39வது வட்ட செயலாரும், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம், அதே இளைஞரணி துணைச் செயலாளர் டாக்டர் எஸ்பி டைகர் சிவா ஆகியோர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், மொத்த பேரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. தூத்துக்குடி சிவன்கோயில் தெரு நுழைவுப் பகுதியிலும், ஜெயராஜ் ரோட்டிலும் இந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக பூத்துக் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது பிஜேபி மற்றும் கூட்டணி கட்சிகள் குறித்து யாரும் பேசக்கூடாது மற்றும் தலைமை முடிவெடுக்கும் வரை யாரும் பிஜேபி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் குறித்து யாரும் பேசவோ விமர்சனம் செய்து சுவரொட்டி ஒட்டவோ கூடாது . தலைமையில் இருந்து உத்தரவு வந்தால் ஓட ஓட விரட்டும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என அவர் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
காலையில் கூட்டணி குறித்து விமர்சிக்க கூடாது என தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் அதிமுக தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டிருக்க, மாலையில் தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி வீதியில் பிஜேபி கட்சியினர் அதிமுக கூட்டணியில் பிஜேபி இல்லை என அறிவித்ததை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்தும் அதிமுக எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இச்சம்பவங்கள் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் அதிமுக - பாஜகவினரிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.