கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மேல் முறையீடு செய்வதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை நிவர்த்தி செய்யவும், மேல்முறையீடு தொடர்பான தெளிவுரை வழங்கவும் தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் உள்ள உதவி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விண்ணப்பித்தலில் உள்ள குறைகள் களையப்பட்டு, உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தாசில்தார் பிரபாகர், சிவில் சப்ளை தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.