கோவில்பட்டியில் காரில் கடத்தப்பட்ட 25 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கார் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி பகுதியில் போதைபொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் நேற்று முன்தனம் கோவில்பட்டி கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் எட்டயபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த காரில் இருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காரை ஓட்டிவந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் கோவில்பட்டி பசுவந்தனை சாலையை சேர்ந்த கணேசராம் மகன் பரசுராம் (வயது 24) என தெரிய வந்தது. இது தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், இந்த புகையிலை பொருட்கள் யாருடையது? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கடத்தி செல்லப்பட்டது? என்று பரசுராமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.