பரோலில் வெளிவந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்த சாமி மகன் சண்முகையா (57) என்பவர் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1985ம் ஆண்டு ஆதாயத்திற்காக காளியப்பபிள்ளை என்பவரை கொலை செய்த வழக்கில் 25.04.1990 அன்று கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து சிறையிலிருந்தார்.
சிறையிலிருந்த கைதி சண்முகையா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 24.07.1992 அன்று ஜாமீனில் வெளிவந்தார். பின் இவ்வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் மேற்படி கைதி சண்முகையாவிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ததன் அடிப்படையில் கடந்த 14.07.2000 அன்று மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலடைக்கப்பட்டார்.
21 ஆண்டுகளாக சிறையிலிருந்த கைதி சண்முகையா, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லையென கடந்த 15.01.2019 முதல் 20.01.2019 வரை ஆகிய 6 நாட்கள் பரோலில் வெளியே வந்தவர் மீண்டும் சிறை செல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலர் தர்மலிங்கம் என்பவர் 21.01.2019 அன்று கொடுத்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கைதி சண்முகையாவை தேடிவந்தனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர் விசு ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மேற்படி கைதி சண்முகையாவை கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் மேற்படி தனிப்படையினர் ஆங்காங்கே துப்பு வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில் இன்று மேற்படி கைதி சண்முகையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
பரோலில் வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சண்முகையாவை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.