விளாத்திகுளம் அருகே விநாயகர் சதுர்த்தி தினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பூதலாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான நேற்று காலை முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்கு சென்ற கிராம மக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். சிலர் இதை புகைப்படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், காலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தோம். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி கிடந்ததால் சற்று நேரம் அங்கு காத்திருந்தோம். எனினும் டாக்டர்கள், நர்சுகள் யாரும் வராததால் திரும்பி சென்று விட்டோம். விநாயகர் சதுர்த்தி என்பதால் விடுமுறை அளித்து விட்டார்களா? என்று தெரியவில்லை என்றனர்.