கடந்த முறை நடத்தப்பட்ட பகுதி சபா கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இதுவரை தீர்வு கான எந்தவொரு நடவடிக்கையும் மாநகராட்சி மேற்கொள்ளாததால், இன்று 51வது வார்டில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்த சம்பவம் தூத்துக்குடி மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 60 வார்டுகளுக்கான பகுதி சபா கூட்டம் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்த பகுதி சபா கூட்டத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சிக்கு அனுப்பப்படும். மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கடந்த முறை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வது வார்டில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்களை நிறைவேற்ற தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இது வரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததால் இன்று நடைபெற்ற பகுதியை சபை கூட்டத்திற்கு வார்டு பகுதி மக்கள் யாரும் வராமல் பகுதி சபா கூட்டத்தை முற்றிலும் புறக்கணித்தனர். இதனால் பொதுமக்கள் இன்றி வெறும் நாற்காலிகளோடு மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஊழியர், திமுக பிரமுகர் என மூன்று பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய ஆளும் திமுக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நகர்ப்புற பகுதி சபா கூட்டம் என்பது கண்துடைப்புக்காக நடத்தப்படும் ஓர் கூட்டமாக இருக்கிறதே தவிர, பொதுமக்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் கூட்டமாக இல்லை என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தை பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், 51 வது வார்டில் மாமன்ற உறுப்பினராக இருக்கக்கூடியவர் எதிர்கட்சியான அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கை மற்றும் அடிப்படை வசதிகளை நிறுவேற்றுவதில் மாநகராட்சி பாராமுகம் காட்டுவதாகவும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
பகுதி சபா கூட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற ஆளும் அரசு முயற்சிக்குமானால் பொதுமக்களின் தேவைகளும் நிறைவேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நோக்கத்தை நிறைவேற்ற ஆளும் அரசும் மாநகராட்சி நிர்வாகமும் முன்வருமா?