தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 16ம் தேதி ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் விபரங்கள் ஓரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கவும் மற்றும் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அறிவுறுத்தியுள்ளது.
இப்பணி கடந்த 01.08.2022 முதல் தொடங்க ஆணையிட்டதன் அடிப்படையில் 214 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியிலும் மேற்படி பணியானது 01.08.2022 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று படிவம் 6பி பூர்த்தி செய்து ஆதார் எண் விபரங்களை பெற்று வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 54% வாக்காளர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வாக்காளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க 16.09.2023 (சனிக்கிழமை) அன்று சிறப்பு முகாம் நடத்தி படிவம் 6பி மூலம் ஆதார் எண் வாக்காளர்களிடமிருந்து பெற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்க்கப்படுகிறது.
வாக்காளர்களும் தாங்களாகவே நேரடியாக தங்களது ஆதார் எண் விபரங்களை Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் அல்லது NVSP என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி கைப்பேசி செயலி Google Play Store-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.