ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி குளத்தில் சுமார் 40 வயது மதிக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு எஸ்பி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிப்பட்டி அருகேயுள்ள அடைக்கலாபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரி குளத்தில் 40 வயது முதல் 45 வயது மதிக்கத் தக்க ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
தகவலறிந்த, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு, இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவும், அவர் எப்படி இறந்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை செய்ய ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், வசந்த குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.